foss.lk, Lanka Software Foundation இணைந்து ஒழுங்குசெய்திருந்த FOSSed On Wheels A9 கருத்தரங்குத் தொடர் கடந்த ஜனவரி 30 தொடக்கம் பெப்ரவரி 3 வரை கண்டியிலும் யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்றது.
வவுனியாவிலும் கருத்தரங்கொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தபோதும் இறுதி நேரத்தில் அது கைவிடப்பட்டது.
FOSSed On Wheels நிகழ்ச்சி, கொழும்புக்கு வெளியே கட்டற்ற மென்பொருள் இயக்கத்தினை அறிமுகப்படுத்தவும் கொழும்புக்குள் மட்டும் நில்லாது இலங்கையின் ஏனைய பாகங்களிலும் கட்டற்ற மென்பொருள், லினக்ஸ் பயன்பாடு தொடர்பான அறிவினை, விழிப்புணர்வினை எடுத்துச்செல்வதற்குமாக வடிவமைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி கண்டியிலிருந்து வவுனியா வழியாக யாழ்ப்பாணம் வரை கருத்தரங்குத்தொடரினைக் கொண்டிருந்ததால் “FOSSed On Wheels A9″ என்று பெயரிடப்பட்டது.
வடக்குக்கிழக்கைப் பொறுத்தவரை திருகோணமலையில் கடந்த ஆண்டே இக்கருத்தரங்கு ஒழுங்குபடுத்தப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதற்கு வெளியே தனிப்பட நானும் திருகோணமலையில் இவ்வாறானதொரு கருத்தரங்கினைச் செய்திருந்தேன். தென்கிழக்குப்பல்கலைக்கழகத்துடன் இணைந்து நாம் சம்மாந்துறையில் செய்த கருத்தரங்கும் வெற்றிகரமானதே. யாழ்ப்பாணத்தைப்பொறுத்தவரை கட்டற்ற மென்பொருள் தொடர்பான முதல் கருத்தரங்கு இதுவாகும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முனைவர் சார்ள்ஸ் இக்கருத்தரங்கினை எம்மோடும் LSF உடனும் தொடர்பாடி ஒருங்கிணைத்திருந்தார்.
வாழ்க்கையில் முதன்முறையாக நான் யாழ்ப்பாணம் செல்வதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தித்தந்தமைக்காக இவர்கள் எல்லோருக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். கூடவே முதன்முறையாக என்னை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச்சென்றது கட்டற்ற மென்பொருளே என்பது மகிழ்ச்சிக்குரிய விடயம்.
ஏழு சிங்களத் தோழர்களுடன் நானும் நிவேதனுமாக இரு தமிழர்கள் அணியில் இடம்பெற்றிருந்தோம்.
முதன்முறையாக ஒரு கருத்தரங்கு. கட்டற்ற மென்பொருளுக்கும் எமக்கும் எவ்வளவு தூரம் யாழ்ப்பாணத்தில் வரவேற்பு இருக்கும் என்பது எதிர்பார்ப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமோ வெற்றிகரமாக இக்கருத்தரங்கினை ஒழுங்குபடுத்தியிருந்தற்கும் மேலாக எதிர்பாராத பெரு வரவேற்பில் எம்மைத் திக்குமுக்காடச்செய்துவிட்டது.

2007 இல் ரிச்சர்ட் ஸ்டால்மன் இலங்கை வந்தபோது மாலபேயிலும் பேராதனையிலும் நாம் ஒழுங்குபடுத்திய கருத்தரங்குகளே வரலாறு காணாத ஆர்வலர் கூட்டத்தினை கட்டற்ற மென்பொருளுக்காகக் கூடவைத்திருந்தது.
சரி, ரிச்சர்ட் ஸ்டால்மன் வந்தால் சனம் கூடும் தான். பின்பு திருகோணமலையில் நான் செய்த கருத்தரங்கும் மிகவும் வெற்றிகரமானதாக அமைந்தது. ஆனால் யாழ்ப்பாணத்திலோ இது எதிர்பாராத பெரு வெற்றி. எம்மோடு கொண்டுபோயிருந்த கையேடுகள் தீர்ந்துபோன அனுபவம் இலங்கை லினக்ஸ் பயனர் குழுமத்தினருக்கு இதுவே முதன்முறை.
இலங்கை பூராகவும் உள்ள கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்களின் twitter களும் faceook இந்த வெற்றிச்செய்தியை நீண்ட நேரத்துக்கு எதிரொலித்துக்கொண்டிருந்தன.
கருத்தரங்கின் நிகழ்ச்சி நிரல் வருமாறு:
1. கட்டற்ற திறந்த ஆணைமூல மென்பொருட்களுக்கான அறிமுகமும் கோட்பாட்டு அடிப்படைகளும் – மு. மயூரன்
2. லினக்ஸ் பற்றிய தொழிநுட்ப அறிமுகமும் தொழிநுட்ப விளக்கங்களும் – நிவேதன்
3. பணியிடத்தில் லினக்ஸ் பயன்பாடும் கட்டற்ற மாற்று மென்பொருட்களும் – சாரங்க, குங்சன
இடைவேளை
4. இணையப் பாதுகாப்பு, அந்தரங்கம், மறைகுறியாக்க (encryption) வழிமுறைகள். – மு. மயூரன், சுச்சேத்த
5. லினக்சில் தமிழ்ப் பயன்பாடு – மு. மயூரன்
6. கலந்துரையாடல்.
இதில் இணையப் பாதுகாப்பு பற்றிய அளிக்கை யாழ்ப்பாணத்துக்கு போகும் வழியில் எம்மால் நிகழ்ச்சிநிரலில் உள்ளடக்கப்பட்டது.
இணையத்தளம் மீதான தணிக்கைகள் பற்றிய செய்திகள், யாழ்ப்பாணத்துக்குப் போய்க்கொண்டிருக்கும் அகலப்பாட்டை இணைப்பு போன்றவை கண்ணில் பட்டபோது மிகப்பெரிய எண்ணிமப் பொறிக்குள்(Digital Trap) யாழ்ப்பாண மக்கள் மாட்டுப்படப்போகிறார்கள் என்கிற உண்மையை சமூகப்பொறுப்புணர்வோடு அந்த மக்களுக்கு சொல்லவேண்டியவர்களாக கட்டற்ற மென்பொருள் இயக்கத்தினர் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தோம்.
இதன்பின்னர் மிக நீண்ட உரையடாலுக்குப் பிறகு இத்தலைப்பினை உள்ளடக்குவதற்குத் தீர்மானித்தோம். நாம் சொல்ல நினைத்த செய்தி அங்கே கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களிடம் உரிய முறையில் போய்ச் சேரும் என்றே நம்புகிறோம்.
முதன்முறையாகக் கட்டற்ற மென்பொருளை அறிமுகப்படுத்த யாழ்ப்பாணம் போன எம்மை கட்டற்ற அன்போடும், வெற்றிகரமாக ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்ச்சியோடும் இறால் பொரியலோடும் கணவாய்க்குழம்போடும் வரவேற்ற யாழ் பல்கலைக்கழக சமூகத்துக்கு மனம் கனிந்த நன்றிகள்.
–
கருத்தரங்கில் எனது பேச்சின் ஆரம்பப் பகுதி:






