நான் ஒரு தொழின்முறை வீடியோ தொகுப்பாளன் இல்லை. கலை நேர்த்தி மிக்க வீடியோ தொகுப்பு வேலைகள் செய்வதற்கான தேவைகள் எனக்கு பெரிதாக இல்லை.
சாதாரணமாக ஒரு மின்னஞ்சல் குறிப்பு எழுதுவதற்கு சிக்கலான Desktop Publishing மென்பொருட்களைப் பயன்படுத்த நேர்வது ஒரு கெட்ட அனுபவமாகத்தான் இருக்கமுடியும்.
சாதாரணமாக கட்டுரை கடிதம் எழுத மிக மிக எளிமையான Notepad போன்ற உரைத்திருத்திகளையே பயன்படுத்தி வருகிறேன். Open Office கூட நான் பெரிதாகப் பயன்படுத்துவதில்லை.
இதைப்போலவே வீடியோக்கோப்புக்களை தொகுக்கவும் திருத்தவும் எனக்குத் தேவைப்படுவது சிக்கலில்லாத எளிய சாதாரணமான ஒரு வீடியோ தொகுப்பு மென்பொருள்.
அப்படி ஒன்றை நீண்ட காலமாகத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
நாலைந்து ஆண்டுகளுக்கு முன் வின்டோஸ் பயன்படுத்திய காலத்தில் Windows Movie Maker என்றொரு மென்பொருள் இருந்தது. அது பரவாயில்லை. எளிமையானது. சிக்கலற்றது. ஆனால் அது wmv வடிவில் மட்டும்தான் சேமிக்கும். இது பெரிய தலையிடி. கூடவே அம்மென்பொருள் கட்டற்றதல்ல. எனவே அதில் தங்கியிருக்க முடியாது.
இப்போது க்னூ/லினக்சில் ஏராளம் வீடியோ தொகுப்பு மென்பொருட்களைப் பார்த்தாகிவிட்டது.
தொழின்முறைத் தொகுப்புக்கு உதவும் Cinelerra, Lives போன்றவை எனக்கு பெருஞ்சுமை. அவற்றைப்பயன்படுத்தவும் எனக்குத்தெரியாது அத்தோடு அதைக்கற்றுக்கொள்வதல்ல எனது முக்கியமான நோக்கம்.

பிறகு நான் கண்டுபிடித்தது Kdenlive இது ஒரே நேரத்தில் தொழின்முறை நேர்த்தியுடன் இருப்பதோடு எளிமையும் வாய்க்கப்பெற்றது. அடிக்கடி நின்றுபோகிற, rendering நேரத்து வழுக்களைப் பொறுத்துக்கொண்டால் அருமையான மென்பொருள்தான்.

Kdenlive குழுவினர் எதிர்காலத்தில் ஒரு மிகச்சிறந்த வீடியோத்தொகுப்பு மென்பொருளை கட்டற்ற மென்பொருள் உலகுக்கு அளிக்கப்போகிறார்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. ஆனால் இப்போதைக்கு அதில் வழுக்கள் அதிகம். கூடவே உபுண்டுவுடன் ஒத்திசைய மறுக்கும் பிரச்சினைகளும் உண்டு.

அதுவும் கூட எனக்கு அதிகமானதே.
எனக்குத்தேவை. எளிமை.
தேடு தேடென்று தேடியதில் எனக்குக் கிடைத்த மென்பொருள்தான் “PiTiVi”.
என்ன தேவையோ அது மட்டுமே உள்ள மென்பொருள்.
எனக்கென்ன தேவை?
* இருக்கிற வீடியோ கோப்புக்களை வெட்ட, திருத்த, ஒட்ட வேண்டும்.
* ஒலியை அகற்ற/சேர்க்க வேண்டும்.
* வேறொரு கோப்பு வடிவத்தில்/ அதேகோப்பு வடிவத்தில் சேமிக்க வேண்டும்.
உரைக்கு எப்படி Notepad இருக்கிறதோ அப்படி வீடியோவுக்கு வேண்டும்.
அச்சொட்டதாக இந்தத்தேவையை நிரப்புகிறது PiTiVi.
அதில் இவ்வளவுதான் செய்யமுடியும்.
இப்பொழுது எனக்கு திருப்தி.

இந்தச்செயலியை மேம்படுத்துகிறோம் பேர்வழி என்று மேலும் மேலும் சிக்கலாக்கிக்கொண்டு போகாமல் இதே எளிமையுடன் மேலும் சிற்சில திருத்தங்கள் விருத்திகளுடன் பராமரித்தாலே போதும் PiTiVi குழுவினருக்கு நான் நன்றிஉடையவனாயிருப்பேன்.